அட... முதுகைச் சொறிந்துவிட்டு மாதத்திற்கு 14 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர்!
சீனாவில் வசிக்கும் 32 வயதுடைய ஜாங் சியாவோகியாவோ என்பவர் மனிதர்களின் முதுகைச் சொறிந்துவிடும் விசித்திரமான சேவையைத் தொடங்கி அமோக லாபம் ஈட்டி வருகிறார். ஷென்சென் நகரில் இவர் நடத்தி வரும் இரண்டு கடைகள் மூலம் இவருக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 14 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
நவீன நகரங்களில் அதிக வேலைப்பளு காரணமாக அவதிப்படும் மக்களுக்கு மனஅமைதியையும் நல்ல தூக்கத்தையும் தருவதற்காக இந்த வித்தியாசமான சேவையை அவர் தொடங்கியுள்ளார். வாடிக்கையாளர்கள் ஒரு மணி நேர சேவைக்காக நான்காயிரத்து இருநூறு ரூபாயை கட்டணமாகச் செலுத்தி இந்தத் சேவையைப் பெற்று வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் தன் கணவரின் முதுகைச் சொறிவது போன்ற வீடியோவைக் கண்டபோது இவருக்கு இந்த தொழில் யோசனை தோன்றியுள்ளது. தற்பொழுது இந்தச் சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் சீனாவின் பல பகுதிகளில் தனது கடைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்.