அலறும் மக்கள்.. 24 மணி நேரத்தில் 5 முறை நிலநடுக்கம் - பாகிஸ்தானில் அடுத்தடுத்து நில அதிர்வுகள்!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தேசிய நில அதிர்வு மையத்தின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த நில அதிர்வுகள் அனைத்தும் கடந்த 24 மணி நேரத்திற்குள் பதிவாகியுள்ளன.
நேற்று மாலையில் இருந்து இரவு வரை 3 முறையும், இன்று காலை அடுத்தடுத்து 2 முறையும் என மொத்தம் 5 முறை நிலம் அதிர்துள்ளது. இந்தத் தொடர் நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.3 முதல் 5.5 வரை வெவ்வேறு அளவுகளில் பதிவாகியுள்ளன. குறிப்பாக இன்று காலையில் 4.3 மற்றும் 5.5 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
பலத்த நில அதிர்வின் மையப்புள்ளி பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பர்கான் பகுதியிலிருந்து சுமார் 58 முதல் 63 கி.மீ தொலைவில், பூமியின் அடியில் 19 முதல் 35 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் தாக்கியதால், பலூசிஸ்தான், கோஹ்லு, ரக்னி உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் பலமாக உலுக்கப்பட்டன. இதனால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி, திறந்தவெளிப் மைதானங்கள் மற்றும் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
தொடர் நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்துள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக இதனால் ஏற்பட்ட பெரிய அளவிலான கட்டிடச் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளன. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகள் மோதும் எல்லையில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், அங்கு நில அதிர்வுகள் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.