சீல் வைக்கப்பட்ட ‘ஸ்ட்ராங் ரூம்’.. வாக்குஎண்ணும் 62 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு - துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் காவல்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், மக்களின் தீர்ப்பைத் தாங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது பாதுகாப்பாக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 62 மையங்களில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பிற்காகத் தேர்தல் ஆணையம் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 'ஸ்ட்ராங் ரூம்' கதவு அருகே துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாம் அடுக்கு மையத்தின் வெளிப்பகுதியில் மாநில ஆயுதப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மூன்றாம் அடுக்கு மையத்தைச் சுற்றியுள்ள வெளி வளாகத்தில் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியைத் தவிர, ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் நேரலை காட்சிகளை வேட்பாளர்களின் முகவர்கள் பார்ப்பதற்குக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி யாரும் மையத்திற்குள் நுழையாதவாறு மெட்டல் டிடெக்டர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் வரும் மே மாதம் 4-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் திறக்கப்படும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? என்பது தெரிந்துவிடும். அதுவரை இந்த 62 மையங்களும் துணை ராணுவத்தின் இரும்புப் பிடியில் இருக்கும் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.