"மீன்பிடித் தொழிலை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம்" - சீமான் கண்டனம்!

 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியைக் தனியார் நிறுவனம் கோரியுள்ளதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பகுதியில், சுமார் 425 கோடி ரூபாய் அசாத்திய மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைப்பதற்கான திட்ட அனுமதியை 'ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம்'  அரசிடம் கோரியுள்ளது. இந்த விவகாரம் டெல்டா மற்றும் கடலோரப் பகுதி மக்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பரங்கிப்பேட்டை கடற்பகுதியானது பல தலைமுறைகளாகத் தமிழக மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன்பிடித்து வரும் ஒரு மிக முக்கியமான பாரம்பரிய மீன்பிடிப் பகுதியாகும்.

இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளித்தால், கடலடிச் சூழலியல் முற்றிலும் மாறுபடும். ரசாயனக் கழிவுகளால் கடல் நீர் கடுமையாக மாசுபட்டு, கடல்வாழ் பல்லுயிர் பெருக்கம் மற்றும் பவளப்பாறைகள் மொத்தமாக அழியும் அபாயம் உள்ளது. கடலின் வளம் அழிந்தால், அதனை மட்டுமே நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாகப் பறிபோய், அவர்கள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை ஏற்படும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

மக்களின் வாழ்விடங்களையும், இயற்கை வளங்களையும் அழித்துத் கொண்டு வரப்படும் எந்தவொரு தொழில்வளர்ச்சித் திட்டமும் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தத் திட்டத்தின் ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கோரியுள்ள இந்த ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி விண்ணப்பத்தை அரசு உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும், கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.