சீமான் - சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் "ஒரு கைதியின் டைரி".. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 'கண்ணன் ரவி குரூப்ஸ்' சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, இத்திரைப்படத்திற்குச் சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது. "ஒரு மனிதன், ஒரு கதை, ஒரு சகாப்தம்... இதுவே ஒரு கைதியின் டைரி" என்ற வரிகளுடன் வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ஒரு கிரைம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தில் சாந்தனு பாக்யராஜுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
1985-ம் ஆண்டு பாக்யராஜ் கதையமைப்பில், பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் தலைப்பு தான் 'ஒரு கைதியின் டைரி'. தற்போது அதே வரலாற்று சிறப்புமிக்கத் தலைப்பில் பாக்யராஜின் மகனான சாந்தனு நடிப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய படத்தின் கதைக்கும் இதற்கும் தொடர்பு உள்ளதா என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.