நாம் தமிழர் கட்சி நிர்வாகி தற்கொலை... காரைக்குடியில் சோகம்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும், பொறியாளராகவும் பணியாற்றி வந்தார். பிரபாகரன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் உள்ள கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தெற்கு காவல்துறையினர், பிரபாகரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த பிரபாகரனுக்கு மனைவியும், 2 வயது மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற காரைக்குடி தொகுதிக்கான தேர்தலில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியால் ஏற்பட்ட மனவருத்தம் காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப மற்றும் கடன் சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.