”வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கை” - பட்ஜெட் குறித்து சீமான் விமர்சனம்!
தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றமளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முந்தைய 2025-26 நிதிநிலை அறிக்கையை விடப் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.2,240 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.100 கோடியும் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மின்துறைக்கு ரூ.5,350 கோடி, தொழில் வளர்ச்சித் துறைக்கு ரூ.1,419 கோடி, கைத்தறித் துறைக்கு ரூ.302 கோடி மற்றும் நீர்வளத் துறைக்கு ரூ.196 கோடி என அதிமுக்கிய துறைகளுக்கான நிதியைத் தவெக அரசு குறைத்துள்ளது.
தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.30 கோடியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.50 கோடியும் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டிருப்பது எந்தவிதத்திலும் போதுமானது அல்ல. ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை மற்றும் பெண்களுக்கான இலவசப் போக்குவரத்து பயணம் குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.20,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ரூ.7,000 மட்டுமே எனக் கூறுவது ஏமாற்று வேலை. பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் குறுவை சாகுபடி பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு பற்றியும் பேசாமல் கடந்து சென்றுவிட்டனர்.
சமூகநீதி பேசும் அரசு, மாநில அரசின் சார்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது மோசடியாகும். ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் தவெக அரசு ஏறக்குறைய ரூ.25,000 கோடி வரை கடன் வாங்கியிருப்பதே நிதி நிர்வாகத்தின் லட்சணமாகும்.
2031-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் எனக் கூறும் அரசு, அதை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளைக் குறிப்பிடவில்லை. பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் தருவதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கையை உயர்த்தப் பார்ப்பதாகக் கூறுவது, மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்த முடியாத அவல நிலையையே காட்டுகிறது. மொத்தத்தில், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ அல்லது மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப் பொருளாதார நடவடிக்கைகளோ இல்லாத வெற்று அறிக்கையாகவே இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது எனச் சீமான் தெரிவித்துள்ளார்.