சீமான் சின்னம் பாரிவேந்தர் கட்சிக்கு ஒதுக்கீடு... குஷியில் அதிமுக கூட்டணி!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி பயன்படுத்திய ‘மைக்’ (Microphone) சின்னத்தை, இந்த முறை இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (IJK) ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சிக்குத் தற்காலிகமாக ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 2024 தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தற்போது மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அக்கட்சிக்குப் பழைய சின்னமான ‘கரும்பு விவசாயி’ அல்லது அதற்கு இணையான ‘ஏர் உழவன் சின்னத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் கூடின.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி, தங்களுக்கு ஒரு பொதுவான சின்னம் வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்த மனுவைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், தற்போது ‘மைக்’ சின்னத்தை இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே, மாநிலம் முழுவதும் இந்தப் பொதுச் சின்னத்தில் போட்டியிடலாம். இந்த ‘மைக்’ சின்னத்தைப் பயன்படுத்தித் தமிழகம் முழுவதும் தனது வேட்பாளர்களைக் களம் இறக்கப் பாரிவேந்தர் திட்டமிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் சீமானின் முழக்கத்திற்கு அடையாளமாக இருந்த ‘மைக்’ சின்னம், இந்த முறை அதிமுக கூட்டணியின் ஒரு அங்கமான ஐஜேகே கையில் கிடைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.