“சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி”... அம்பாசமுத்திரத்தில் வைரலாகும் போஸ்டர்கள்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் போஸ்டர் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இந்த போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
கட்சித் தொண்டர்களால் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், "விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சீமானுக்கு வாக்களியுங்கள்" என்றும், "சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி" என்றும் கம்பீரமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் படத்துடன், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டும் வகையிலான இந்த விளம்பரப் போஸ்டர்கள் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
அம்பாசமுத்திரம் தொகுதி முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டு வரும் இந்த அதிரடி போஸ்டர் பிரச்சாரத்தால் அப்பகுதியில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.