வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க... நவம்பர் 14-ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!
தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டச் சேவைகளைப் பொதுமக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையிலும், குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற நவம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னையில் உள்ள மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் இக்குறைதீர் முகாம்கள் செயல்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டு தொடர்பான பல்வேறு தேவைகளை இந்த முகாமைப் பயன்படுத்திப் பூர்த்தி செய்துகொள்ளலாம். குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தல், புதிய செல்போன் எண்களைப் பதிவு செய்தல் அல்லது மாற்றுதல், மூத்த குடிமக்களுக்கான அங்கீகாரச் சான்று வழங்குதல் மற்றும் குறைதீர்க்கும் சேவைகள்.
முகாமிற்கு வருபவர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணைக் கொண்டு வருவது அவசியமாகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.