விஐபி தரிசனம் ஏமாற்றம் - திருவண்ணாமலையில் பொதுவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த சேகர்பாபு!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்ற திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு சிறப்பு விஐபி தரிசனம் கிடைக்காததால், அவர் பொது தரிசன வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவி வருகின்றன.
திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார். வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று சம்பந்த விநாயகரைத் தரிசித்த அவர், சிறப்பு தரிசனத்திற்காகக் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் கோவில் அதிகாரிகள் யாரும் அவரை அழைத்துச் செல்ல வராததால், அதிருப்தியடைந்த அவர் பொது தரிசன வரிசையிலேயே சென்று உண்ணாமுலை அம்மனைத் தரிசித்தார். பின்னர் அர்ச்சகர்கள் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.
கோவிலுக்கு வரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் விஐபிக்களுக்கு நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், சேகர்பாபுவை வேண்டுமென்றே காக்க வைத்துள்ளதாக திமுகவினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், விஐபி தரிசனம் பெற முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளதாகவும், சேகர்பாபு திடீரென வந்ததால் தான் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய இயலவில்லை என்றும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் உரிய மரியாதை அளிக்கப்பட்டிருக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவம் தற்போது அரசியல், ஆன்மிக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.