தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை விலகல்? புதிய தலைவராக மாணிக்கம் தாகூருக்கு வாய்ப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தில் பல்வேறு புதிய அரசியல் கூட்டணிகள் மற்றும் ஆட்சி மாற்ற நகர்வுகள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழ்நிலையில், சத்தியமூர்த்தி பவனிலும் தலைமைப் பொறுப்பு மாற்றங்கள் நிகழப்போவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து கே. செல்வப்பெருந்தகை விரைவில் மாற்றப்படலாம் என்ற விவாதம் அக்கட்சியின் உள்வட்டாரங்களில் பலமாக எழுந்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதும், பல முக்கியத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவியதும் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தொகுதிப் பங்கீட்டின் போதே ஆரம்பக் கட்டத்தில் தவெக தலைமையிலான புதிய கூட்டணியை ஆதரித்து, அக்கட்சியோடு கைகோர்த்திருந்தால் தங்களுக்குக் கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்திருப்பார்கள் என்றும், அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கனிந்திருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்கள் பலர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தொடர் விமர்சனங்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பொறுப்பேற்று, தான் வகித்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து எந்நேரமும் விலகத் தயாராக இருப்பதாகச் செல்வப்பெருந்தகை அண்மைய செய்தியாளர் சந்திப்பிலேயே குறிப்பிட்டிருந்தார். இந்த மாத இறுதிக்குள் இந்தத் தலைமை மாற்றம் அதிகாரப்பூர்வமாக நிகழலாம் எனத் தெரிகிறது.
செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், காலியாகும் அந்த மிக முக்கியப் பொறுப்பைக் கைப்பற்றத் தமிழகக் காங்கிரஸின் முன்னணித் தலைவர்கள் தங்களின் டெல்லி மேலிடச் செல்வாக்கைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
புதிய மாநிலத் தலைவர் பதவிக்கான ரேசில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தீவிரமாக முயன்று வருவதாகச் சத்தியமூர்த்தி பவனிலிருந்து வரும் ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில், அகில இந்தியக் காங்கிரஸ் தலைமையோடும் ராகுல் காந்தியோடும் நெருங்கிய அரசியல் தொடர்பில் இருக்கும் எம்பி மாணிக்கம் தாகூருக்கு இந்தத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்படவே அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழகத்தின் மற்றுமொரு முக்கியத் தேசியக் கட்சியான காங்கிரஸிலும் தேர்தல் தோல்விகளின் எதிரொலியாக இந்த தலைமை மாற்றம் நிகழவிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.