செம மாஸ்... 'முதியோர் உபகரண உதவித்தொகை திட்டம்' - பட்ஜெட்டுக்குப் பின் எகிறும் எதிர்பார்ப்பு!
தேர்தல் வாக்குறுதியில் தவெக குறிப்பிட்டிருந்த 'முதியோர் உபகரண உதவித் தொகை திட்டம்' மூலம் மூத்த குடிமக்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்திற்கான முக்கிய அறிவிப்புகள், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் தனது கட்சி அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியில் மூத்த குடிமக்களின் நலனுக்காக 'முதியோர் உபகரண உதவித் தொகை திட்டம்' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள முதியோர்களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
முதுமைக் காலத்தில் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்குத் தேவையான கைத்தடி, கண் கண்ணாடி, சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவிகள், பல்செட் போன்ற முக்கியப் பொருட்களை வாங்குவதற்கு இந்த ரூ.10,000 நிதியுதவி பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் புதிய அரசின் பட்ஜெட்டில் (நிதிநிலை அறிக்கை) இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்பிறகு இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும், பயனாளிகள் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களும் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக அரசின் இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மூத்த குடிமக்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.