செம ட்விஸ்ட்... சீமானை தோற்கடித்த டாக்டர் பிரபு தவெக அமைச்சரவையில்   ‘என்ட்ரி’!

 


தமிழக சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்த்துப் போட்டியிட்டு 1,00,627 வாக்குகள் பெற்று அபார வெற்றி கண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் டி.கே.பிரபுவுக்கு, தற்போது புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல் மருத்துவரான இவர், சீமானை விடச் சுமார் 70,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுப் பிரம்மாண்ட வெற்றி பெற்றதையடுத்து, கட்சியின் மிக முக்கியமான முகமாக மாறியுள்ளார். தொகுதியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் இவருக்குக் கிடைத்துள்ள நல்ல அறிமுகமே, இவரை அமைச்சரவை வரை கொண்டு சென்றுள்ளது.

இந்தத் தேர்தலில் சீமான் 30,477 வாக்குகளும், காங்கிரஸின் மாங்குடி 54,417 வாக்குகளும், அமமுகவின் தேர்போகி பாண்டி 33,066 வாக்குகளும் பெற்றுப் பின் தங்கிய நிலையில், பிரபுவின் இந்த அதிரடி வெற்றி தவெக தலைமையைக் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக, அவருக்குப் பால்வளத்துறை அல்லது சுகாதாரத்துறை ஆகிய இரண்டில் ஒரு முக்கிய இலாகா ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு மருத்துவர் என்பதால் சுகாதாரத் துறையை வழங்கினால் அது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என விஜய் தரப்பு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

சீமான் போன்ற ஒரு மூத்த அரசியல் தலைவரைத் தனது முதல் தேர்தலிலேயே வீழ்த்தியதன் மூலம், டி.கே.பிரபு தற்போது தமிழக அரசியலின் 'ஹாட் டாபிக்' ஆக மாறியுள்ளார். நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் இவர் அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள செய்தி காரைக்குடி தொகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இளம்படை அமைச்சரவையில் ஒரு மருத்துவர் இடம்பெறுவது புதிய அரசின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.