இந்தியா முழுவதும்   200 சிப் நிறுவனங்கள்! 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... ரூ.1 லட்சம் கோடி முதலீடு!

 

 

இந்தியாவின் செமிகண்டக்டர் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் Semicon 2.0 திட்டத்தில் 200 சிப் டிசைன் ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

செமிகான் இந்தியா 2026 மாநாட்டையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், Semicon 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சுமார் 11 முதல் 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவாகும். 

Semicon 2.0 திட்டத்தின் முதல் கட்டத்தில் 105 ஸ்டார்ட்அப்கள் சிப் வடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்டன. அவற்றில் 20 நிறுவனங்கள் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு வெஞ்சர் கேபிடல் முதலீட்டை பெற்றுள்ளன.இதையடுத்து இரண்டாவது கட்டத்தில் குறைந்தது 200 சிப் டிசைன் ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

செமிகண்டக்டர் உற்பத்தி விரிவடையும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதில் தொழிற்சாலை தள பணியாளர்கள், கிளீன் ரூம் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு தொழில்துறை தேவைக்கேற்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் செமிகண்டக்டர் துறையில் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Semicon 2.0 திட்டம் மொத்தம் ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்பட உள்ளது. சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சிப் உற்பத்தி ஆலைகள், மேம்பட்ட பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு என 6 முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.இதன் மூலம் தனித்தனி சிப் உற்பத்தி ஆலைகளை அமைப்பதுடன், அவற்றைச் சுற்றியுள்ள முழுமையான செமிகண்டக்டர் தொழில்துறை சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் சிப் டிசைன் துறையை விரிவுபடுத்தும் இந்த நடவடிக்கை, உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் திறன் மேம்பாட்டில் முக்கிய கவனம் செலுத்தும் திட்டமாக பார்க்கப்படுகிறது.