செமி கண்டக்டர் மையம், விமான நிலையம்... ஆந்திராவில் ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளை மேம்படுத்தும் வகையில், சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில், சுமார் ரூ.5,600 கோடிக்கும் அதிகமான செலவில் பொது-தனியார் கூட்டு முறையில் அமைக்கப்பட்ட 'அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை' பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆந்திராவின் பாரம்பரியக் கட்டடக்கலை அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பசுமை விமான நிலையம் முதற்கட்டத்தில் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
விசாகப்பட்டினத்தில் ரூ.460 கோடி செலவில் அமையவுள்ள ஆந்திராவின் முதல் செமிகண்டக்டர் ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கர்நூல் மற்றும் அனந்தபூரில் அமைக்கப்பட்ட சோலார் மற்றும் காற்றாலை மின் வழித்தடத் திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன. மேலும், ரூ.1,880 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆந்திர மாநில ஆளுநர் எஸ்.அப்துல் நசீர், முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.