"பிள்ளையைத் தயார் செய்யாமல் அரசியலுக்கு அனுப்புவது ஆபத்து": எஸ்.ஏ.சி-யை விமர்சித்த இயக்குனர் சேரன்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் (SAC) குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சமீபத்தில் விஜய் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ரூ. 5 கோடி கடன் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளான நிலையில், தனது மகனுக்கு ஆதரவாக எஸ்.ஏ.சி சில பேட்டிகளை அளித்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி சேரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குச் சரியான அரசியல் புரிதலைக் கற்றுக்கொடுக்காமல், வெறும் கூட்டத்தைக் காண்பிக்க மட்டும் அவர்களைப் பயன்படுத்துவது சரியல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"விஜயையும் அவரது ரசிகர்களையும் முதலில் அரசியலுக்குத் தயாராக்குங்கள். இந்தச் சமூகம் ஆபத்தான இடத்திற்குச் செல்வதைத் தடுக்கவே இந்தப் பதிவு. எஸ்.ஏ.சி-க்கு அவர் பிள்ளை முக்கியமென்றால், நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம்" என உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் கண்ட நிலையில், திரையுலகைச் சேர்ந்த ஒரு மூத்த இயக்குனரே விஜயின் அரசியல் வருகையை "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தடை" என்று விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.