செனகல் கடற்கரையில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து... 4 பேர் பலி!

 

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் கடற்கரையில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளுக்கு கடல் வழியாக அகதிகள் சட்டவிரோதமாகச் செல்லும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், செனகல் நாட்டின் தலைநகர் டாக்கருக்கு தெற்கே உள்ள யென்னே கடற்கரை பகுதியில் கடந்த புதன்கிழமை அதிகாலை அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் சிக்கியது.

சிறிய மீன்பிடிப் படகுகளில் இருந்து பெரிய மரப்படகுக்கு அகதிகளை மாற்றிக்கொண்டிருந்தபோது, அந்தப் படகு பாறையில் மோதி கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தது 50 பேர் பயணம் செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 பேர் உடல்கள் மீட்பு

இந்த விபத்தைத் தொடர்ந்து மீட்புப் படையினர் கடலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.படகில் பயணம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் மாயமானவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கேனரி தீவுகளுக்குச் செல்லும் கடல் வழிப்பாதையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.தொடர்ந்து அதிகரித்து வரும் இதுபோன்ற கடல் விபத்துகளைத் தடுக்க செனகல் அரசு கடலோர கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.