செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகச் செயலாளராகப் பதவி வகித்து வந்த டி.விஜயகுமார், தனது ஆதரவாளர்களுடன் சென்று அப்பகுதியில் இயங்கி வரும் சில தனியார் செங்கல் சூளைகளில் புகுந்துள்ளார். அங்குள்ள உரிமையாளர்களிடம் மாதம் ரூ.1 லட்சம் மாமூல் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் செங்கல் சூளைகளை முழுமையாக இழுத்து மூடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக நிர்வாகி விஜயகுமார் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரைத் தவெக கட்சியில் இருந்து நீக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வேலூர் மற்றும் திருவண்ணாமலை பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பான சூழலும் நிலவியது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், தவெக கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட விவகாரம் தலைமைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்குக் கடுமையான களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட டி.விஜயகுமாரை அவர் வகித்து வந்த கணியம்பாடி ஒன்றியச் செயலாளர் பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் முழுமையாக விடுவித்துத் தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது