அருப்புக்கோட்டையில் பரபரப்பு... தவெக வேட்பாளரைத் திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் இன்று மதியம் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வாக்களிக்க வருகை தந்தார்.
வழக்கமாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களிக்க வரும்போது பெரும் திரளான ஆதரவாளர்களுடன் வருவது வழக்கம். அந்த வகையில் தவெக வேட்பாளரும் இன்று உற்சாகமாக வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
அவர் வாக்களிக்கச் சென்றபோது, அவரிடம் பூத் ஸ்லீப் இல்லை என்பது கண்டறியப்பட்டது. தேர்தல் விதிமுறைகளின்படி அடையாளச் சரிபார்ப்பிற்கு அது முக்கியம் என்பதால், அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
வேட்பாளரே பூத் ஸ்லீப் இல்லாமல் வந்த சம்பவம் அங்கு வந்திருந்த மற்ற வாக்காளர்களிடையே சிறிது நேரப் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், உடனடியாகத் தேவையான ஆவணங்கள் மற்றும் பூத் ஸ்லீப்பை எடுத்துக் கொண்டு சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்தார்.
இரண்டாவது முறையாக வந்தபோது அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களைக் காட்டி, அவர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். "ஆர்வக்கோளாறில் பூத் ஸ்லீப்பை எடுத்து வரத் தவறிவிட்டேன், மற்றபடி அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தனர்" என அவர் அங்கிருந்தவர்களிடம் சிரித்தபடி கூறிவிட்டுச் சென்றார்.