பெங்களூருவில் பரபரப்பு.. ஆண்களை வழிமறித்து விபச்சாரத்திற்கு அழைத்த 6 வெளிநாட்டு அழகிகள் கைது!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் விபச்சாரத்தில் ஈடுபட முயன்ற 6 வெளிநாட்டுப் பெண்களை மடிவாலா போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
பெங்களூருவின் பரபரப்பான பகுதியான கோரமங்களா - மடிவாலா சோதனைச் சாவடி அருகே உள்ள நடைபாதையில், சில வெளிநாட்டுப் பெண்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வழியாகச் செல்லும் ஆண்களை வழிமறித்து, பாலியல் தொழிலுக்காகத் தனிமையில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்தப் பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட பெண்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததற்கான பாஸ்போர்ட் அல்லது விசா உள்ளிட்ட எந்தவிதமான முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக எவ்வளவு காலம் இங்குத் தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது மற்றும் பாஸ்போர்ட் விதிகளின் கீழ் முறையாக ஆவணங்களை வைத்திருக்காதது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் சமீபகாலமாக வெளிநாட்டுப் பெண்கள் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.