சென்னையில் பரபரப்பு... போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு!

 

சென்னை குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல சரித்திர பதிவேடு (History Sheeter) ரவுடி ஒருவரைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவுடி தமிழ் அழகு மீது கொலை, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரவுடி தமிழ் அழகு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவன் ரகசியமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காகக் காவல் துறையின் தனிப்படை போலீசார் அவனைத் திருமுடிவாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்த தமிழ் அழகு, பாதுகாப்புப் பணியில் இருந்த தனிப்படை தலைமைக் காவலரை கையில் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றான்.

ரவுடியின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த போலீசார், உடனடியாகச் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வரவும் தற்காப்பிற்காகவும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தப்பி ஓட முயன்ற ரவுடியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடி தமிழ் அழகின் வலது கணுக்காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவன் அலறியடித்தபடி கீழே விழுந்ததை அடுத்து, போலீசார் அவனை அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த ரவுடி தமிழ் அழகு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடனடியாகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ரவுடி நடத்திய தாக்குதலில் கையில் வெட்டுக் காயமடைந்த தலைமைக் காவலருக்கும் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்துக் குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.