சென்னையில் பரபரப்பு... பாரில் தகராறு.. இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!

 

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபான பாரில் ஏற்பட்ட திடீர் தகராறின் தொடர்ச்சியாக, இலங்கைத் தமிழ் இளம்பெண் ஒருவர் மீது கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் காவல் துறையினர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள வணிக வளாக மதுபான பார் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாக, இளம்பெண் ஒருவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி,  இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளம்பெண் யாசினி. இவர் நேற்றிரவு கோயம்பேடு பகுதியில் உள்ள பிரபல மதுபான பார் ஒன்றிற்குத் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்குள்ள நடன மேடையில் அனைவரும் நடனமாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினருக்கும் யாசினி தரப்பிற்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு பாரின் உள்ளே முற்றியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரையும் ஊழியர்கள் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பியுள்ளனர். இதனையடுத்து யாசினி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். அப்போது, பாரில் மோதிக்கொண்ட எதிர்த்தரப்பு கும்பல் ஆத்திரத்துடன் தங்களது சொகுசு காரில் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளது.

கோயம்பேடு வெளிவட்டச் சாலை அருகே வந்தபோது, அந்த கும்பல் தங்களது காரைக் கொண்டு யாசினியின் இருசக்கர வாகனத்தின் மீது மிகக் கொடூரமான முறையில் வேகமாக மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த யாசினி மீது கார் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூர விபத்தில் யாசினியுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அவரது ஆண் நண்பரும் தூக்கி வீசப்பட்டு மிகக் கடுமையான ஆழமான காயங்களுக்கு உள்ளானார். அருகில் இருந்தவர்கள் மற்றும் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், காயமடைந்த நபரை உடனடியாக மீட்டுச் சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தற்பொழுது தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் கோயம்பேடு காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் எண்களைக் கண்டறியவும், தப்பியோடிய கும்பலை அடையாளம் காணவும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள அனைத்துப் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் தற்பொழுது முழுமையாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுபான பாரில் ஏற்பட்ட சாதாரணத் தகராறு, வெளிநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் திட்டமிட்டுக் கார் ஏற்றிக் கொலை செய்யும் அளவிற்கு மாறியுள்ளது சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை போலீசார் தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.