கோவையில் பரபரப்பு... ஆம்னி சொகுசுப் பேருந்தில் ₹37.30 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் முக்கிய நுழைவு வாயில்களில் ஒன்றான சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில், தேர்தல் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் (Static Surveillance Team) இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின்போது, பேருந்தில் இருந்த ஒரு பார்சலில் ஏராளமான தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த நகைகளைக் கொண்டு வந்த நபரிடம் இது தொடர்பான முறையான ரசீதுகளோ அல்லது ஆவணங்களோ இல்லாததால், அதிகாரிகள் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மொத்த எடை மற்றும் தற்போதைய சந்தை மதிப்பின்படி, அதன் மதிப்பு சுமார் ₹37.30 லட்சம் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நகைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்துப் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15, 2026 முதல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் அல்லது அதற்கு இணையான மதிப்புள்ள பரிசுப் பொருட்களை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் இதற்காக 72 பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.