கோவையில் பரபரப்பு... தவெக எம்.எல்.ஏ. மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல்!
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறிப் பணியைத் தொடங்கச் சென்ற தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ சுகுமார் மீது பொதுமக்கள் மத்தியில் இருந்து கல் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்பைக் குட்டையைத் தூர்வாரி, அங்கே கழிவுநீரை நிரப்பும் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, அந்தப் பணிகளைத் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பதற்காகத் தவெக எம்எல்ஏ சுகுமார் நேரில் வருகை தந்தார். அவரைக் கண்ட பொதுமக்கள் உடனடியாகத் திரண்டு வந்து முற்றுகையிட்டுக் கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரெனக் கூட்டத்திலிருந்து எம்எல்ஏ சுகுமார் மீது கல் வீசப்பட்டது. இதனால் அங்கு கடுமையான பரபரப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
நிலைமை மோசமடைவதைக் உணர்ந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, வன்முறைச் சூழலில் சிக்கிய தவெக எம்எல்ஏ சுகுமாரைப் பத்திரமாக மீட்டு அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.