டெல்லியில் பரபரப்பு... உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... தலைநகரில் பாதுகாப்பு தீவிரம்!

 

இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரப்பரப்பையும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. தகவலறிந்த உடனேயே காவல் துறையினர், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அகற்றும் படையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி நகரம் முழுவதுமே ஏற்கனவே முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கியச் சந்திப்புகள், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், மக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்களில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனைகளையும் கண்காணிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை ஆகஸ்ட் 15 வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில், இத்தகைய மிரட்டல் வெளியானது தலைநகரில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.