டெல்லியில் பரபரப்பு... செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினர் மற்றும் நிபுணர்கள் நடத்திய தீவிரச் சோதனைக்குப் பிறகு இது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மதிய வேளையில், மும்பை மாநகரக் காவல் துறையின் அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு  மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, டெல்லியில் உள்ள வரலாற்றுச் சின்னமான செங்கோட்டையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைத் தகர்க்கப் போவதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். மிரட்டலின் தீவிரத்தை உணர்ந்த மும்பை போலீசார், உடனடியாக இந்த விபரத்தைப் புது டெல்லி காவல் துறைக்கு தெரிவித்து எச்சரித்தனர். தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கோட்டை வளாகம் முழுவதும் உச்சகட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

டெல்லி சட்டம்-ஒழுங்கு போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படைகள் சம்பவ இடத்திற்குப் போர்க்கால அடிப்படையில் விரைந்தனர். செங்கோட்டையின் உட்பகுதி, வெளி வளாகம், வரலாற்றுச் சுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூடும் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாகத் தீவிரச் சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற இந்த  சோதனையின் முடிவில் சந்தேகத்திற்கிடமான வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த மிரட்டல் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்த விடுக்கப்பட்ட வெறும் 'வதந்தி' என்பதை டெல்லி போலீசார் உறுதிப்படுத்தினர்.

வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனத் தெரிந்தபோதிலும், நாட்டின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னம் என்பதால் செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பழைய டெல்லி பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.