டெல்லியில் பரபரப்பு... ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது புகார்... சுதந்திர தினவிழாவில் சர்ச்சை!
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலைப் பாடும் போது, அதனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது டெல்லி காவல்துறையிடம் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்பாக 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது. பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பாடலை நிறுத்துமாறு சைகை செய்ததாகவும், இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
வழக்கறிஞர்கள் குனால் விநாயக் மற்றும் சுப் சர்மா ஆகியோர் டெல்லி ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவத்தைக் கண்டித்துக் கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக மற்றும் பாஜக யுவ மோர்ச்சாவினர் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, தலைவர்கள் யாரும் பாடலை நிறுத்த முயலவில்லை எனத் தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு அமர்வதற்கு நாற்காலி எடுத்து வைக்குமாறு தான் சோனியா காந்தி சைகை செய்தார் என்றும், அரசியல் காரணங்களுக்காக பாஜக இதனைத் தவறாகச் சித்தரிக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளது.