லால்குடியில் பரபரப்பு... தவெக வேட்பாளரின் உறவினர் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், லால்குடி தொகுதியில் நிகழ்ந்த இந்தப் பணப் பறிமுதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்தது. லால்குடி வட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்குக் கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியது. அதன் மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கு மேல் இருந்ததால், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய 'சல்லடை' சோதனையில், மொத்தம் ரூ. 50 லட்சம் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்ட நபர், தமிழக வெற்றிக் கழகத்தின் லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப. கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை வேட்பாளரின் உறவினர் வீட்டில் சிக்கியுள்ளது, தவெக தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தவெக கூட்டங்களுக்குப் பணம் கொடுத்து ஆட்கள் திரட்டப்படுவதாக ஒரு ஆடியோ சர்ச்சை நிலவி வரும் நிலையில், தற்போது வேட்பாளரின் உறவினர் வீட்டில் பணம் சிக்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.