மயிலாப்பூரில் பரபரப்பு.. பூத் ஏஜெண்டுகளுடன் மல்லுக்கட்டிய தமிழிசை... திமுக - பாஜகவினர் இடையே கடும் தள்ளுமுள்ளு.. சாலைமறியல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றான மயிலாப்பூரில், வாக்குப்பதிவு மையத்திற்குள் புகுந்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், திமுக முகவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளாக மாறியது.
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளி வாக்குச்சாவடியில் இன்று காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வாக்குச்சாவடிக்கு ஆய்விற்காக வந்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், முறையான அடையாள அட்டை இல்லாத ஒருவர் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதாக அங்கிருந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
இதற்கு அங்கிருந்த திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அதிகாரிகள் சரிபார்த்த பின்னரே வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள், வேட்பாளர் தேவையில்லாமல் இடையூறு செய்கிறார்" என அவர்கள் வாதிட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக அங்குப் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தேவையற்ற கூட்டத்தைக் கலைத்த போலீசார், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்தனர்.
சம்பவத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "ஜனநாயகக் கடமையை ஆற்ற வரும் மக்களைத் திசைதிருப்பவும், கள்ள ஓட்டுப் போடவும் ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
மயிலாப்பூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ த. வேலு, பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பி. வெங்கடரமணன் ஆகியோர் போட்டியிடுவதால், இன்று மாலை வரை அங்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.