பொள்ளாச்சியில் பரபரப்பு... ப்ளீச்சிங் பவுடர் கலந்த குடிநீரைக் குடித்த 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர்த் தொட்டியிலிருந்து நீர் அருந்திய 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது, அதிகளவில் ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்திக் கழுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொட்டியில் போதிய அளவு நீர் நிரப்பப்படுவதற்கு முன்பே அதிலிருந்த நீரைக் குடித்த 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
மாணவர்கள் அவதியுறுவதைக் கண்ட பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் உடனடியாக மீட்டுப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
தற்போது மாணவர்களுக்குத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.