சத்தியமங்கலத்தில் பரபரப்பு... பண்ணாரி பூங்காவிற்குள் புகுந்த சிறுத்தை - பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் பீதி!

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் வன உயிரியல் பூங்காவிற்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து உலா வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறுவது வழக்கம்.

பண்ணாரி கோவில் அருகே வனத்துறை பராமரிப்பில் உள்ள வன உயிரியல் பூங்காவிற்குள், அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று மாலை வேளையில் திடீரெனப் புகுந்தது.

பூங்காவின் உள்ளே சிறுத்தைப்புலி அங்கும் இங்கும் அலைந்து திரிந்ததை அங்கு வந்த பக்தர்கள் சிலர் தமது செல்போன்களில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிறுத்தை புகுந்தது மாலை நேரம் என்பதால் பூங்காவின் உட்பகுதிக்கு பக்தர்கள் யாரும் செல்லவில்லை. இதனால் எவ்வித உயிர்ச்சேதமோ, அசம்பாவிதமோ இன்றி அனைவரும் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.

கோவில் மற்றும் பூங்காப் பகுதியில் சிறுத்தை உலா வந்த சம்பவத்தால், அப்பகுதிக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.