ஸ்டாலின் முன்னிலையில் பரபரப்பு .. திமுகவில் உட்கட்சி பூசல்... நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்யப் போவதாக மிரட்டல்!
தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவுக்கு, இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக டாக்டர் கிருத்திகாதேவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை எதிர்த்து நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள் இன்று அண்ணா அறிவாலயத்தில் போராட்டத்தில் குதித்தனர்.
இன்று மதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோது, அங்குக் குவிந்திருந்த எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவாளர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். "தாம்பரம் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும். வெற்றி வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்."
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் கூறுகையில், "தாம்பரம் தொகுதியில் நீண்ட காலமாக மக்கள் பணியாற்றி வரும் எஸ்.ஆர்.ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. வேட்பாளரை மாற்றாவிட்டால், தொகுதியில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளும் தங்களது கட்சிப் பொறுப்புகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம்" எனத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக நேற்று இரவு டி.ஆர்.பாலு வீட்டில் முற்றுகையிட்டு தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் அண்ணா அறிவாலயத்திலேயே உட்கட்சிப் பூசல் வெடித்திருப்பது கட்சி மேலிடத்திற்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றதால் அங்குச் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.