undefined

திருப்பதியில் பரபரப்பு... தரிசன வரிசையில் பெல்ட்டால் தாக்கி கொண்ட பக்தர்கள்!

 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிலவும் கடும் கூட்ட நெரிசல் காரணமாக, தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது திருப்பதியில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள அனைத்து அறைகளும் (31 அறைகள்) நிரம்பி, சிலாதோரணம் பகுதி வரை நீண்ட தூரத்திற்குப் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். கிருஷ்ணதேஜா ஓய்வறை அருகே உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் ஒருவருக்குப் பின்னால் ஒருவராகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட இடநெருக்கடியில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் உருவானது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஒரு பக்தர் ஆத்திரத்தில் தான் அணிந்திருந்த பெல்ட்டைக் கழற்றி மற்றொரு பக்தரைத் சரமாரியாகத் தாக்கினார். அங்கிருந்த 'ஸ்ரீவாரி சேவா' தன்னார்வலர்கள் சண்டையைத் தடுக்க முயன்றும், பக்தர்களின் ஆக்ரோஷம் குறையவில்லை.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், சண்டையிட்டுக் கொண்ட பக்தர்களைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த மோதலால் தரிசன வரிசையில் சிறிது நேரம் பரபரப்பும், தடையும ஏற்பட்டது.

தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்குச் சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாகிறது. இன்று மார்ச் 3 சந்திர கிரகணம் என்பதால், காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோயில் நடை சார்த்தப்பட்டிருக்கும். பக்தர்கள் அனைவரும் பக்தி உணர்வுடன், பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், அராஜகத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.