திருப்பூரில் பரபரப்பு... விஜய் வேன் சக்கரத்தில் விழப்போன மூதாட்டி? நூலிழையில் தப்பிய உயிர்!

 

சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் தனது 'தவெக' வேட்பாளர்களை ஆதரித்துத் தலைவர் விஜய் இன்று (ஏப். 14) சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாகத் திருப்பூர் நோக்கி வந்த அவருக்குத் தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர் எல்லையில் விஜய்யின் பிரச்சார வாகனம் வந்து கொண்டிருந்தபோது, அவரைக் காண ஆர்வத்துடன் முன்னே வந்த மூதாட்டி ஒருவர் எதிர்பாராத விதமாகத் தடுமாறி வேனின் சக்கரத்திற்கு மிக அருகில் விழுந்தார். இதைப் பார்த்த தொண்டர்களும், விஜய்யின் தனிப்படைப் பாதுகாவலர்களும் ஒரு நொடி அதிர்ந்து போயினர்.

சக்கரம் ஏறுவதற்குள் மின்னல் வேகத்தில் செயல்பட்ட பாதுகாவலர்களும், அருகில் இருந்த பொதுமக்களும் அந்த மூதாட்டியை லாவகமாகப் பிடித்து மீட்டனர். "ஆத்தா.. பார்த்து வாம்மா.." என அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டதால் அந்த இடமே சில நிமிடங்கள் ஸ்தம்பித்தது. திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் விஜய் பேசுவதைக் கேட்கக் காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

சித்திரை முதல் நாள் என்பதால் வெயில் மண்டையைப் பிளந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி காற்றோட்டம் கிடைக்காமலும், வெயிலின் தாக்கத்தினாலும் 6 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்து, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பிரச்சாரக் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.