வேளாங்கண்ணியில் பரபரப்பு... பேராலயத்தில் "TVK..TVK.." என முழங்கிய ரசிகர்கள் - விஜய் பயணம் ரத்து செய்தியால் ஏமாற்றம்!
விஜய் இன்று வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தருவதாக இருந்த தகவல், அங்கு பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் செய்த செயலால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
விஜய் இன்று அதிகாலை வேளாங்கண்ணி வருவார் என்ற செய்தியால், நள்ளிரவு முதலே பேராலய வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் பேராலயத்தில் திருப்பலி தொடங்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் திடீரென உற்சாக மிகுதியால் "TVK TVK" என முழக்கமிட்டனர். அமைதியாக நடைபெற வேண்டிய புனித திருப்பலியின் போது, இந்த முழக்கங்கள் எதிரொலித்ததால் பிரார்த்தனைக்கு வந்த பக்தர்களிடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தியதுடன், திருப்பலி நிகழ்வும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து, பேராலய நிர்வாகம் தரப்பில் "விஜய் இன்று இங்கு வரவில்லை" என்ற அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாகவே விஜய் தனது பயணத்தை ரத்து செய்திருந்தாலும், அந்தத் தகவல் தெரியாத ரசிகர்கள் விடிய விடிய அங்கேயே காத்திருந்தது தெரியவந்தது.
விஜய் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட ரசிகர்கள், ஏமாற்றத்துடன் அங்கிருந்து ஒவ்வொருவராகக் கலைந்து சென்றனர். இதனால் கடந்த சில மணிநேரமாக வேளாங்கண்ணி பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணிந்து, இயல்பு நிலை திரும்பியது.
தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், விஜய்யின் வருகைக்காக ரசிகர்கள் காட்டிய அதீத ஆர்வம் புனிதத் தலத்தில் சிறு இடையூறை ஏற்படுத்தியது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தற்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.