வேலூரில் பரபரப்பு... நடுரோட்டில் மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் தற்கொலை.. ஒருதலைக் காதலால் விபரீதம்!
வேலூர் மாவட்டத்தில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிக்குக் கொலை முயற்சி செய்த இளைஞர், பின்னர் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி ராம்சேட் நகரைச் சேர்ந்த ஆயிஷா பர்வீன் (19), டி.கே.எம் கல்லூரியில் பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரியூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (19) என்ற இளைஞர், ஆயிஷா பர்வீனை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்துள்ளார். ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மாணவியை வழிமறித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை மீட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி (CMC) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய வினோத், தனது வீட்டிற்குச் சென்று படுக்கையறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் வினோத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள வினோத், மாணவி ஆயிஷாவை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. தன்னை காதலிக்குமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த ஆத்திரத்திலேயே அவர் மாணவியைக் கொலை செய்ய முயன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டது போலீசாரின் தற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.