மே.வங்கத்தில் பரபரப்பு... மம்தா பானர்ஜியின் மருமகள் தூக்கிட்டு தற்கொலை!
மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகள் உறவுமுறையான பிருஷ்டி முகர்ஜி எனும் 28 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜியின் தாயார் வழியில் மருமகள் உறவுமுறையான பிருஷ்டி முகர்ஜி, கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பீர்பூர் மாவட்டம் குஷம்பா கிராமத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்த அவர், நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று பிருஷ்டி முகர்ஜியின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்டமாக அவரது மரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பரிசோதனைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகரின் உறவினர் தற்கொலை செய்துகொண்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பாராத மறைவு குறித்துக் கட்சியினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் முறையான விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான உண்மையான காரணம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.