முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

 

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும் ஏளனமாகவும் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவின் மூத்த தலைவரும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அந்த மேடையில் பேசிய அவர், தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியதுடன், அவரது திரைத்துறைப் பின்னணியைக் குறிப்பிட்டுச் சில அத்துமீறிய அவதூறு கருத்துக்களை ஒருமையில் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

இப்பேச்சைத் தொடர்ந்து, ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகப் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (பிரிவு 352) மற்றும் வதந்திகளைப் பரப்புதல் (பிரிவு 353(2)) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

காவல்துறையினர் தன்னை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற சூழ்நிலை நிலவியதால், அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று காலையில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் பலமுறை மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர். அப்படிப்பட்ட பொறுப்பான பதவியில் இருப்பவர் பொதுவெளியில் முதலமைச்சரை மதித்துப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். 1967 முதல் தமிழக மக்கள் திரைத்துறையிலிருந்து வந்த தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது இதுபோன்ற தரம் தாழ்ந்த பேச்சுக்கள் முற்றிலும் தேவையற்றவை," எனக் கூறி அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சில மணி நேரங்களிலேயே, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் ஆய்வுக் பணிக்காக வந்திருந்த எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனை மாவட்டக் காவல் துறையினர் சுற்றி வளைத்து  கைது செய்தனர்.