undefined

பரபரப்பு... மார்ச் 5 முதல் அரசு மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

 

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் அரசு மருத்துவர்கள், அடுத்தகட்டமாகச் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.  தமிழக அரசு மருத்துவர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) சார்பில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் முன்வைக்கும் முதன்மையான கோரிக்கைகளாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ன் படி, மருத்துவர்களுக்கு உரிய காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை (DACP) மறுவரையறை செய்து உடனடியாக வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHC) பணியாற்றும் மருத்துவர்களுக்குப் படிகளாக மாதம் ரூ.3,000 வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய அளவில் புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

இது குறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பலமுறை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை. எனவே, வரும் மார்ச் 5-ஆம் தேதி முதல் சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளி பிரிவு (OP) மற்றும் அறுவை சிகிச்சை போன்ற முக்கியப் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், அவசரச் சிகிச்சை மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் பாதிக்காத வகையில் போராட்டத்தை நடத்த மருத்துவர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.