கடும் வீழ்ச்சியிலிருந்து மீண்ட பங்குச்சந்தை: இறுதியில் சென்செக்ஸ், நிஃப்டி சிறிய இழப்புடன் நிறைவு!

 

நாள் முழுவதும் கடும் சரிவைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள், வர்த்தக நேரத்தின் இறுதிப் பகுதியில் திடீரெனக் கிடைத்த ஆதரவால் மீண்டு வந்து சிறிய சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் வர்த்தகத்தின் இறுதியில் 120.83 புள்ளிகள் (0.16%) சரிந்து 74,781.76 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 79.70 புள்ளிகள் (0.34%) குறைந்து 23,398.10 என்ற புள்ளிகளில் தனது வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.

வர்த்தக நாள் முழுவதும் வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம் மற்றும் உலகளாவிய எதிர்மறைச் செய்திகளால் பெரும் சரிவை நோக்கிச் சென்ற சந்தை, இறுதி நேர ஏல அமர்வுகளில் ஏற்பட்ட திடீர் மீட்சி காரணமாகப் பெரும் சரிவிலிருந்து தப்பியது.

ஐடி மற்றும் எஃப்எம்சிஜி துறைகளின் பங்குகள் ஓரளவு கைக்கொடுத்த போதிலும், ரியல் எஸ்டேட் மற்றும் பிற முக்கியத் துறைகளின் பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தைச் சந்தித்தன. தொடக்கத்தின்போது ஏற்பட்ட ரூ. 6 லட்சம் கோடி இழப்புடன் ஒப்பிடும்போது, இறுதி நேர மீட்சியால் முதலீட்டாளர்களுக்குச் சற்று ஆறுதல் கிடைத்தாலும், ஒட்டுமொத்தச் சந்தையில் பதற்றமான சூழலே நிலவுகிறது.