தவெக எம்எல்ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கு - விசாரணையைத் கையில் எடுத்தது அமலாக்கத்துறை - செந்தில்பாலாஜி ஆஜராவாரா?!
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை வீழ்த்துவதற்காக, அக்கட்சியின் எம்.எல்.ஏ-விடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை நேரடியாகத் தனது விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் ஹவாலா நெட்வொர்க் இதில் தொடர்புபட்டிருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், தவெக ஆட்சிக் கவிழ்ப்பிற்காக ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக அண்மையில் பரபரப்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக எம்.எல்.ஏ கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் கரூர் திமுக பிரமுகர்களான ரமேஷ், கார்த்திக், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ் உட்பட இதுவரை 11 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரையைச் சேர்ந்த 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், இந்த குதிரைப் பேரப் பின்னணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமண பெருமாள் என்பவருக்கு முக்கியப் பங்கு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிங்கப்பூரில் நீண்டகாலமாக வசித்து வரும் லட்சுமண பெருமாள், தமிழக முன்னாள் அமைச்சர் ஒருவருக்குப் பினாமியாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியத் தரவுகளைப் போனில் பேசி அழிக்க முயல்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இவரைக் கைது செய்யத் தீவிர முயற்சி எடுத்து வரும் போலீசார், அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் அனுப்பி உஷார்ப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், அவர்கள் இருவரும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் இதுவரை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
மாநிலப் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் வெளிநாடுகளில் இருந்து ஹவாலா முறையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதும், கணக்கில் காட்டப்படாத ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை அமலாக்கத்துறை தாமாக முன்வந்து தன் கையில் எடுத்துள்ளது. வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அமலாக்கத்துறை இந்த வழக்கிற்குள் நுழைந்திருப்பது, குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சருக்குப் பெரும் நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தையும் பரபரப்பையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.