"பொய் புகாரில் கைது செய்வது தான் தவெக அரசின் வேலை" - செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட முக்கியச் சிக்கல்களைத் தீர்க்காமல், எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்வதையே தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு முதன்மைச் செயல்பாடாகக் கொண்டு இயங்கி வருகிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சாடியுள்ளார்.
தமிழகத்தில் மேகதாது விவகாரம் மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்த முதலமைச்சர் விஜய், அதனை இதுவரை நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சியினர் மீது பொய்யான புகார்களைப் பதிவு செய்வதும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமே இந்த அரசின் வேலையாக உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.