மோசடி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல்!

 

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2011–2015) போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, அத்துறையில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகச் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்ட நிலையிலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேவையின்றி விசாரணையை இழுத்தடிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து, வழக்கிலிருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.