கரூர் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனத் தெரிந்தே கோவை சென்றார் செந்தில் பாலாஜி - எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிரடி!
கரூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இன்று கரூர் அடுத்த சரஸ்வதி நகர், செல்வ நகர், எல்.என்.எஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்தும், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வாகனத்தில் நின்றபடி மக்களிடையே பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சர் செந்தில் பாலாஜியை இலக்கு வைத்துப் பல்வேறு புகார்களை முன்வைத்தார்: "கடந்த தேர்தலில் வெள்ளி கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றிச் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை கரூர் மக்கள் அவரிடம் ஏமாற மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டுதான், அவர் பயந்துபோய்க் கோவைக்குச் சென்றுவிட்டார். இங்கே தனக்கு வேண்டிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்."
"அரவக்குறிச்சியில் 3 சென்ட் நிலம் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றினார். மணல் கொள்ளையைத் தடுத்த என் மீது பொய் வழக்குகளைப் போட்டனர். அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அந்தப் பணத்தை வைத்துத் தேர்தலில் ஓட்டுக்கு 5,000 ரூபாயும், தங்கமும் கொடுக்கப் போவதாகக் கூறுகிறார்கள். எதைக் கொடுத்தாலும் அது உண்மையான தங்கம் தானா என உரசிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்."
திமுக ஆட்சியில் மணல் கொள்ளை தாராளமாக நடப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை நினைவூட்டினார். "நாங்கள் சொன்னதைச் செய்திருக்கிறோம், எனவே இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்தார்.