லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு!
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை பிறப்பித்துள்ள லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அசோக்குமார் தாக்கல் செய்துள்ள இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், அசோக்குமாரின் மனுவிற்கு நீதிமன்றத்தில் விரிவான விளக்கத்தையும், பதிலையும் தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்குக் கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது.
அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அசோக்குமார் நீண்ட நாட்களாக ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், அவருக்கு எதிராகத் தேடப்படும் நபர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.