செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்த நெருக்கடிகள்... தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

 

தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், தற்போது அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவிக் கேப்டனாக மற்றுமொரு புதிய சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜியின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த அதிரடித் தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த வேட்புமனுவில், தனக்குள்ள ஒட்டுமொத்த சொத்து விவரங்கள் மற்றும் தன் மீது நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களைச் செந்தில் பாலாஜி முறையாகவும் முழுமையாகவும் பதிவு செய்யவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி மற்றும் சொத்து மதிப்புகளைத் துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை மீறி, முக்கியத் தகவல்களை அவர் திட்டமிட்டே மறைத்துள்ளார்.

தகவல்களை மறைத்துத் தேர்தல் விதிகளை மீறியுள்ளதால், கோவை தெற்கு தொகுதியில் அவர் பெற்ற வெற்றியைச் சட்டப்படி செல்லாததாக அறிவிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேர புகாரில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜிக்கு, இந்தத் தேர்தல் வழக்கும் சேர்ந்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.