நீட் தேர்வு, எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவிற்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானங்கள்!

 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நீட் நுழைவுத் தேர்வு முறைக்கு எதிராகவும், மத்திய அரசின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிராகவும் இன்று இரண்டு அரசினர் தனித் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ. க. அருண்ராஜ் இத்தீர்மானத்தை பேரவையில் முன்மொழிகிறார்.

நீட் தேர்வு முறை கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதுடன், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிராக அமைந்திருப்பதாகத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தேசிய அளவில் நீட் முறையைக் கைவிட்டு, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மீண்டும் மருத்துவச் சேர்க்கையை நடத்த மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

எஃப்.சி.ஆர்.ஏ திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இத்தீர்மானத்தை தாக்கல் செய்கிறார். மத்திய அரசின் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா 2026-ன் தற்போதைய வடிவம், சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, இம்மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மாநில அரசுகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.அ