முதலமைச்சருக்குப் புதிய அலுவலகம் அமைப்பது தண்டச் செலவு - இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்!

 

தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தைச் தலைமைச் செயலகத்தின் 10-வது மாடிக்கு மாற்றுவதும், புதிய தலைமைச் செயலகத் திட்டங்களும் நிதிப் பற்றாக்குறை நிலவும் சூழலில் அவசியமற்ற வீண் செலவு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் அலுவலக மாற்றம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து சிபிஐ எம்பி சுப்பராயன்,  முதலமைச்சரின் அலுவலகம் தலைமைச் செயலகத்தின் 10-வது மாடிக்கு மாற்றப்படுவதாகவும், துணை நகரத்தில் புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு எவ்வளவு?

மாநில அரசு கடும் நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் இந்தச் சூழலில் இத்தகைய திட்டங்கள் உண்மையில் தவிர்க்க முடியாத அவசியமா அல்லது வெறும் தண்டச் செலவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அரசு செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் மேலும் கூறியதாவது:

நிதி வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மாநில அரசு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக அவசியமற்ற செலவுகளை அதிகரிப்பதில் அரசு தீவிர ஆர்வம் காட்டுவது ஏன்? "இடிப்பாரை இல்லாத மன்னனாகச் செயல்படுவது ஆபத்தானது. கடிவாளம் இல்லாத குதிரைப் பயணம் பாதுகாப்பற்றது" எனக் குறிப்பிட்ட அவர், அரசு உடனடியாகத் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.