அரசு மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான சிறப்பு வார்டுகள் அமைப்பு

 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழக அரசு மற்றும் பொது சுகாதாரத்துறை அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப பாதிப்புகளுக்கெனத் தனிச் சிறப்பு வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வார்டுகளில்  வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க இந்த வார்டுகள் ஏசி வசதியுடன் அல்லது போதிய காற்றோட்டத்துடன் இருக்கும். நீரிழப்பைத் தடுக்கத் தேவையான ஓ.ஆர்.எஸ் கரைசல்கள், ஐ.வி திரவங்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உடல் வெப்பநிலையை உடனடியாகக் குறைக்க ஐஸ் பேக்குகள் மற்றும் குளிர் நீர் தெளிப்பான்கள் தயார் நிலையில் உள்ளன.

வெப்ப பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான உடல் சோர்வு மற்றும் தசைப் பிடிப்பு, அதிகப்படியான தாகம் மற்றும் மயக்கம், உடல் வெப்பநிலை அதிகரித்தும், வியர்வை வராமல் இருப்பது, தலைவலி மற்றும் வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகள் தென்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். தாகம் எடுக்காவிட்டாலும் அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளைப் பருக வேண்டும். மெல்லிய மற்றும் தளர்வான பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிவது அவசியம்.

வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க "பூஜ்ஜிய உயிரிழப்பு"  என்ற இலக்குடன் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.